வானில் இருள் சூழ்ந்திருந்தது, சில்லென்ற காற்றுடன் மேகக் கூட்டங்கள்
மழையாய் பூமி வந்தது. தகித்த வெப்பத்தில் கருகி கொண்டிருந்த பூமியை,
ஒரு கணத்தில் குளிர வைத்த மழைத் துளிகளை இரு கரங்களில் சிறை
கொண்டு ரசித்திருந்தேன். அன்று மழை மிகச் சீராக மண் வந்து
சேர்ந்திருந்தது. மிகச் சீராக, பூக்கள் முகம் கழுவும்படி, கிளைகள் புதிய துளிர்களை உயிர்க்கும்படி. குளிர்ச்சியும், மகிழ்ச்சியும் மட்டுமே அளித்தபடி பெய்ந்திருந்தது மழை.
மணிப் போல் தெறித்து விழுந்திருந்த மழைத் துளிகளிடம் மிகுந்த நட்புடன்,
எதிர்பாராத தருணத்தில் மண்ணில் விழுந்து மகிழ்வித்த காரணம் வினவினேன்.
புன்முறுவலுடன் பதிலளிக்க துவங்கியன துளிகள், பூமி மேலும் குளிர்ந்திருந்தது. வெண்ணிற பூக்கள் பறித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவளோடு
சேர்ந்து, சிரித்து விளையாட ஆசைக் கொண்டு என்றது முதலில் விழுந்த துளி, காற்றோடு தலையசைத்த இலைகள், மேகம் பார்த்து இச்சை கொண்டதால்
என்றது ஒரு துளி. அயர்ச்சி நிறைந்த முதியவளின் பிராத்தனைச் சாரத்தில்
மனம் குளிர்ந்து என்றது மூன்றாவது துளி. மனம் சேர்ந்த இருவரின் கைகோர்ப்பில் ஈரம் சேர்க்க என்றது மற்றொரு துளி. தனித்திருந்த ஒருவனின் தேடலுக்கு, கொஞ்சம் துணை நிற்க என்றது வேறொரு துளி. காரணங்கள்
அனைத்தும் உவகை தந்தது, சிந்தி விழுந்த துளிகள் போலவே. புன்னகையோடு கேட்டிருந்தேன், ஒவ்வொரு துளிகளிலும் கரைந்திருந்தேன்.
சட்டென்று மழையின் வேகம் அதிகரித்திருந்தது, காற்றின் சீற்றத்தில் விருட்சக கிளைகள் விழத் தொடங்கியது. மிரட்சியுடன் நேரம் நகர்ந்திருந்தது. இனிமை
துறந்த பயணம் இப்பொழுது எதற்காக என்று வினவினேன். பேதை ஒருத்தியின் அடர்ந்த கண்ணீர் துளிகள் காற்றில் கலந்தமையால் என்றது மொத்த துளிகளும். மழையின் அடர்த்தி அன்று அதிகரித்து கொண்டேயிருந்தது வெகு நேரத்திற்கு.
.
3 comments:
அருமை
//பேதை ஒருவளின் அடர்ந்த கண்ணீர் துளிகள் காற்றில் கலந்தமையால் என்றது மொத்த துளிகளும். மழையின் அடர்த்தி அன்று அதிகரித்து கொண்டேயிருந்தது வெகு நேரத்திற்கு.//
arumai. u have excellent flow. keep rocking geetha
மழையோடு நீங்கள் நடத்திய
உரையாடல் வசீகரம்.
Post a Comment