Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Sunday, May 16, 2010

பறவையின் உருவச் சித்திரம்

சமீபத்தில் படித்தவையில்,  வெகுவாய் கவர்ந்த கவிதை ஒன்று "பறவையின் உருவச் சித்திரம்",  மிக அழகான கற்பனை உணர்வை நெகிழ்ந்து ரசிக்கமுடிகிறது இக்கவிதையில்.  பகிர்கிறேன்.


 பறவையின் உருவச் சித்திரம்

முதலில் ஒரு கூண்டின் சித்திரம் தீட்டு
திறந்த கதவுடன்
பின்னர் தீட்ட வேண்டியது
கவர்ச்சியாக ஏதாவது
எளிமையாக ஏதாவது
அழகாக ஏதாவது
பயனுள்ள ஏதாவது
பறவைக்காகத்தான்
பிறகு சித்திரம் வரைந்த சீலைத் துணிச்சட்டத்தை
ஒரு மரத்தின் மேல் சாய்த்து  வை
ஒரு  பூங்காவிலோ
ஒரு தோப்பிலோ
அல்லது ஒரு காட்டிலோ
மரத்தின் பின்னல் ஒளிந்துகொள்
ஒன்றும் பேசாமல்
அசையாமல்... ...
சிலவேளை  பறவை  சீக்கிரம்  வந்துவிடலாம்
ஆனால்  அந்த  முடிவுக்கு  வருவதற்குப்
பல  வருடங்களை  எடுத்துக்கொள்ளவும்
செய்யலாம்
நம்பிக்கை   இழக்கக் கூடாது  பொறுத்திரு
தேவையானால் வருடக் கணக்கில்
பொறுத்திரு
பறவையின் வருகையின் விரைவு அல்லது
தாமதத்திற்கும் 
சித்திரத்தின் வெற்றிக்கும்
எவ்விதத் தொடர்புமில்லை
பறவை வரும்போது
அது  வருவதாக  இருந்தால்
மிக  ஆழ்ந்த  மௌனம் காட்டு 
கூண்டில் பறவை நுழையும்வரை காத்திரு
நுழைந்தவுடன் 
தூரிகையால் கதவை மென்மையாகச் சாத்திக்
கூண்டுக்  கம்பிகள்  அனைத்தையும்
ஒன்றன்பின்  ஒன்றாக  அழித்துவிடு
பறவையின்  இறகுகள்  எதன்மீதும்
படாமல்  இருக்கக்  கவனம்கொள்
பின்னர்  மரத்தைச்  சித்திரமாகத்  தீட்டு
அதன்  கிளைகளிலேயே  மிக அழகான  ஒன்றைத்
தேர்ந்தெடு
பறவைக்காகத்தான்
பிறகு பசும் தழைக் கொத்துகளையும்
காற்றின் புத்துணர்ச்சியையும்
சூரிய  ஒளித்தூசியையும்  
கோடை  வெப்பத்தில்  புற்களிடையே
பூச்சிகள்  எழுப்பும்  ஓசையையும்
வண்ணமாகத்  தீட்டு
பிறகு பறவை பாட விழையும்வரை 
காத்திரு
பறவை பாடவில்லையென்றால்
அது மோசமான அறிகுறி
சித்திரம்  மோசம்  எனும்  அறிகுறி
ஆனால்  அது  பாடினால்  நல்ல  அறிகுறி
உன்னை  நீ  அறிவித்துக்கொள்ளலாம்  
என்னும் அறிகுறி
பிறகு  பறவையின்  இறகுகளில்  ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
சித்திரத்தின் ஒரு மூலையில்
எழுது   உன் பெயரை.

- மொழிபெயர்ப்பு  -  வெ.ஸ்ரீராம்.


இக்கவிதை இடம் பெற்ற நூல் "சொற்கள்",  எழுதியவர் "ழாக் ப்ரேவெர்",
கற்பனை நிலை கவிதைகளும்,  யதார்த்த  மக்கள்  நிலை கவிதைகளும் நிறைந்து  கவர்கிறது  புத்தகம்  முழுவதும்.  மழைச் சாரலின் மென் துளிகளும்,  அன்றாட வாழ்வின் அயர்ச்சியின்  வேர்வையையும்   இயல்பு  நிலையில்  நின்று  உணரவைக்கிறது  ஒவ்வொரு  கவிதையும்.


ழாக் ப்ரேவெர்,  இரண்டாம் உலகப் போர் சூழலில் வாழ்ந்த மகத்தான கவிஞர்,  பல அருமையான படைப்புகளை  உலகிற்கு  பரிசளித்தவர்.  "வாழ்க்கை என்பதற்கு மிகவும் உண்மையான,  மிகவும் பயனுள்ள கலைசொற்களில் ஒன்று கவிதை"  என்ற அழகான உண்மை வரிகளுக்கு சொந்தக்காரர் ழாக் ப்ரேவெர்.


"சொற்கள்"  ஒரு  நல்ல வாசிப்பனுபவம்.

.

Sunday, April 18, 2010

குட்டி இளவரசன்


கவிதையை போல் உணரவைக்கும் சிறிய புத்தகம் குட்டி இளவரசன். சிறார் இலக்கியம் என்ற வரிசையில் வந்திருந்தாலும்,  நிச்சயம் பெரியவர்களுக்கான ஒரு அழகான கதை.

மனித வாழ்வில் ஒன்றிவிட்ட விசித்திர குணநலன்களை மிக இயல்பாய் சுட்டிக் காட்டி, ஒரு சிறுவன் உணரும் மிக மென்மையான எண்ணங்களில் வாழ்வின் உண்மைகளை உணர்த்திக் காட்டும் வரிகளால் நிறைந்துள்ளது நாவலின் பக்கங்கள்.



                                           ஆசிரியர் -  அந்த்வான் து செந்த்- எக்சு‌பெரி
                              மொழி பெயர்ப்பு  -   வெ.ஸ்ரீராம்,  மதன்கல்யாணி
                                                            (க்ரியா பதிப்பகம்)



பயணம் மேற்கொண்ட  விமானி ஒருவர்,  விமானம் பழுது பெற்று,  பாலைவனத்தில்  தரையிறங்குகிறார்.  வெம்மை மட்டுமே நிறைந்த சூழலது.
விமானம் பழுதுபார்க்க போராடிக்கொண்டிருக்கும் வேளையில்,  விண்மீனிலிருந்து ஒரு அழகிய சிறுவன் வருவது போல் கற்பனைக்கொண்டு , அவனோடு கழிக்கும் அற்புத பொழுதுகளை இங்கு கதையாய் விரித்துள்ளார்.


குட்டி இளவரசன்,  தன்னிடமிருந்த மலர் ஒன்றின்மேல் கோவம் கொண்டு,
தன் கிரகத்கதை விட்டு வெளியே வேலை தேடும் பொருட்டும்,  அறிவை தேடும் பொருட்டும் மற்ற கிரகங்கள் செல்கிறான்,  அங்கு ஒவ்வொரு கிரகங்களிலும் பலவித மனிதர்களை சந்திக்கிறான்.  மனிதர்களின் இயல்பு  கண்டு மிகுந்த வியப்படைகிறான்.  பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொள்கிறான்.  இறுதியாய் பூமி வந்தடைகிறான்,  விமானியிடம் நேசம் கொள்கிறான், புதிராய் பேசுகிறான்,  நரியுடன் நட்பு பாராட்டுகிறான்,  பின்பு இனம் புரியா உணர்வை சுமக்கும் கனத்த மனதை அளித்துவிட்டு பிரிந்து செல்கிறான்.


 இதனில்,  குட்டி இளவரசனும் விமானியும் பகிர்ந்து கொள்ளும் நேசம், 
அவனின் தனிமை வாழ்வு,  மலரின்மேல் கொண்டிருக்கும் காதல், காதலின்
இனிமை,  புரிதலின்மை,  நரியுடன் கொண்ட நட்பு,  நட்பின் தேவை,  பிரிவு
என அழகான உணர்வுகளை வார்த்தைகளில் செதுக்கி அதன் மூலம் யதார்த்த உண்மைகளை உலகிற்கு  விவரித்துள்ளார் ஆசிரியர்.


"ஒரு புதிரின் ஆளுமை மிதமிஞ்சி இருக்கும்போது பணியாமல் இருக்க முடிவதில்லை...... ",  "ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது சூரிய அஸ்தமனங்கள் மனதுக்கு பிடித்திருக்கிறது......",  " இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது   கண்களுக்கு தென்படாது....... ",  "நீ பழக்கபடுத்திக்கொண்டதற்கு  நீ என்றுமே பொறுப்பாளியாகிறாய்.  உன் ரோஜாவுக்கு நீதான் பொறுப்பாளி ....."
போன்ற வரிகள் மனதில்  இனிய அலைகளை  ஏற்படுத்திவிடுகிறது.


இப்புத்தகம்  படிக்கும்  தருணங்களிலெல்லாம் ஓர் மென்மையான உணர்வு ஆட்கொள்வது மிக இனிய அனுபவம்.  குட்டி இளவரசன் ஓர் அற்புதம்.

.

Sunday, March 7, 2010

சிரித்த முல்லை

இயற்கை இன்பத்தில் நம்மை மலர வைக்கும்
பாரதிதாசனின் கவிதை ஒன்று...


                                  

 
                    










மாலைப்  போதில்  சோலையின்  பக்கம்
சென்றேன்.  குளிர்ந்த தென்றல்  வந்தது.
வந்த  தென்றலில்  வாசம்  கமழ்ந்தது .
வாசம்   வந்த வசத்தில்  திரும்பினேன்.
சோலை   நடுவில்  சொக்குப்  பச்சைப் 
பட்டுடை  பூண்டு  படர்ந்து  கிடந்து 
குலுக்கென்று  சிரித்த  முல்லை 
மலர்க்கொடி  கண்டேன்  மகிழ்ச்சிகொண்  டேனே  !


- பாரதிதாசன்