Sunday, May 30, 2010

மழைத் துளிகள்






வானில்    இருள்    சூழ்ந்திருந்தது,    சில்லென்ற    காற்றுடன்    மேகக்     கூட்டங்கள்
மழையாய்   பூமி   வந்தது.    தகித்த   வெப்பத்தில்   கருகி   கொண்டிருந்த     பூமியை,  
ஒரு     கணத்தில்   குளிர     வைத்த     மழைத்   துளிகளை    இரு   கரங்களில் சிறை
கொண்டு      ரசித்திருந்தேன்.      அன்று       மழை       மிகச்     சீராக       மண்     வந்து
சேர்ந்திருந்தது.    மிகச்    சீராக,     பூக்கள்    முகம்     கழுவும்படி,     கிளைகள்    புதிய   துளிர்களை   உயிர்க்கும்படி.   குளிர்ச்சியும்,    மகிழ்ச்சியும்     மட்டுமே     அளித்தபடி பெய்ந்திருந்தது   மழை.


மணிப்    போல்  தெறித்து   விழுந்திருந்த   மழைத்   துளிகளிடம்   மிகுந்த   நட்புடன்,
எதிர்பாராத தருணத்தில் மண்ணில் விழுந்து மகிழ்வித்த காரணம் வினவினேன்.
புன்முறுவலுடன் பதிலளிக்க துவங்கியன துளிகள்,  பூமி மேலும் குளிர்ந்திருந்தது.  வெண்ணிற   பூக்கள்   பறித்து   விளையாடிக்   கொண்டிருந்த   சிறுமி    ஒருவளோடு
சேர்ந்து,  சிரித்து  விளையாட  ஆசைக்  கொண்டு   என்றது  முதலில்  விழுந்த  துளி,  காற்றோடு    தலையசைத்த    இலைகள்,    மேகம்   பார்த்து   இச்சை   கொண்டதால்
என்றது    ஒரு   துளி.    அயர்ச்சி   நிறைந்த   முதியவளின்   பிராத்தனைச்   சாரத்தில்
மனம்       குளிர்ந்து     என்றது      மூன்றாவது      துளி.    மனம்    சேர்ந்த   இருவரின்   கைகோர்ப்பில்  ஈரம்  சேர்க்க என்றது மற்றொரு துளி.  தனித்திருந்த   ஒருவனின்   தேடலுக்கு,   கொஞ்சம்    துணை   நிற்க    என்றது    வேறொரு   துளி.    காரணங்கள்
அனைத்தும்  உவகை  தந்தது,  சிந்தி விழுந்த துளிகள் போலவே.  புன்னகையோடு கேட்டிருந்தேன்,   ஒவ்வொரு   துளிகளிலும்  கரைந்திருந்தேன்.


சட்டென்று மழையின் வேகம் அதிகரித்திருந்தது,   காற்றின் சீற்றத்தில் விருட்சக கிளைகள்  விழத்  தொடங்கியது.   மிரட்சியுடன்   நேரம்   நகர்ந்திருந்தது.    இனிமை
துறந்த  பயணம்  இப்பொழுது   எதற்காக  என்று  வினவினேன். பேதை  ஒருத்தியின்    அடர்ந்த கண்ணீர்  துளிகள்  காற்றில்  கலந்தமையால்  என்றது  மொத்த  துளிகளும்.  மழையின் அடர்த்தி அன்று அதிகரித்து கொண்டேயிருந்தது வெகு நேரத்திற்கு.

.

Thursday, May 20, 2010

சிட்டுக் குருவி



                                             
                               
                                              மெல்லிய  மேனியில்
                                              வெண்ணிற  சிறகுகள்
                                              அடர்ந்து  விரிந்திருக்கிறது
                                              மென்சிவப்பு  வாயினில்
                                              அழகுற  கவ்வியபடி
                                              இலையொன்றும்  பூவொன்றும்
                                              சிறுமணி கண்கள்
                                              இரண்டிலும்  ஒளிமின்னும்
                                              மௌன  புன்னகை
                                              ஓவியப்  பறவை  ஒன்றில்
                                              ஆழ்ந்து   திளைத்து
                                              விரல்கொண்டு வருட
                                              முற்படும் பொழுது ...
                                              தோல் தட்டிச் செல்கிறது
                                              சிட்டுக் குருவியொன்று
                                              கொஞ்சம் சிறகடித்து
                                              என்னை பரிகசித்து.

 ....  

Sunday, May 16, 2010

பறவையின் உருவச் சித்திரம்

சமீபத்தில் படித்தவையில்,  வெகுவாய் கவர்ந்த கவிதை ஒன்று "பறவையின் உருவச் சித்திரம்",  மிக அழகான கற்பனை உணர்வை நெகிழ்ந்து ரசிக்கமுடிகிறது இக்கவிதையில்.  பகிர்கிறேன்.


 பறவையின் உருவச் சித்திரம்

முதலில் ஒரு கூண்டின் சித்திரம் தீட்டு
திறந்த கதவுடன்
பின்னர் தீட்ட வேண்டியது
கவர்ச்சியாக ஏதாவது
எளிமையாக ஏதாவது
அழகாக ஏதாவது
பயனுள்ள ஏதாவது
பறவைக்காகத்தான்
பிறகு சித்திரம் வரைந்த சீலைத் துணிச்சட்டத்தை
ஒரு மரத்தின் மேல் சாய்த்து  வை
ஒரு  பூங்காவிலோ
ஒரு தோப்பிலோ
அல்லது ஒரு காட்டிலோ
மரத்தின் பின்னல் ஒளிந்துகொள்
ஒன்றும் பேசாமல்
அசையாமல்... ...
சிலவேளை  பறவை  சீக்கிரம்  வந்துவிடலாம்
ஆனால்  அந்த  முடிவுக்கு  வருவதற்குப்
பல  வருடங்களை  எடுத்துக்கொள்ளவும்
செய்யலாம்
நம்பிக்கை   இழக்கக் கூடாது  பொறுத்திரு
தேவையானால் வருடக் கணக்கில்
பொறுத்திரு
பறவையின் வருகையின் விரைவு அல்லது
தாமதத்திற்கும் 
சித்திரத்தின் வெற்றிக்கும்
எவ்விதத் தொடர்புமில்லை
பறவை வரும்போது
அது  வருவதாக  இருந்தால்
மிக  ஆழ்ந்த  மௌனம் காட்டு 
கூண்டில் பறவை நுழையும்வரை காத்திரு
நுழைந்தவுடன் 
தூரிகையால் கதவை மென்மையாகச் சாத்திக்
கூண்டுக்  கம்பிகள்  அனைத்தையும்
ஒன்றன்பின்  ஒன்றாக  அழித்துவிடு
பறவையின்  இறகுகள்  எதன்மீதும்
படாமல்  இருக்கக்  கவனம்கொள்
பின்னர்  மரத்தைச்  சித்திரமாகத்  தீட்டு
அதன்  கிளைகளிலேயே  மிக அழகான  ஒன்றைத்
தேர்ந்தெடு
பறவைக்காகத்தான்
பிறகு பசும் தழைக் கொத்துகளையும்
காற்றின் புத்துணர்ச்சியையும்
சூரிய  ஒளித்தூசியையும்  
கோடை  வெப்பத்தில்  புற்களிடையே
பூச்சிகள்  எழுப்பும்  ஓசையையும்
வண்ணமாகத்  தீட்டு
பிறகு பறவை பாட விழையும்வரை 
காத்திரு
பறவை பாடவில்லையென்றால்
அது மோசமான அறிகுறி
சித்திரம்  மோசம்  எனும்  அறிகுறி
ஆனால்  அது  பாடினால்  நல்ல  அறிகுறி
உன்னை  நீ  அறிவித்துக்கொள்ளலாம்  
என்னும் அறிகுறி
பிறகு  பறவையின்  இறகுகளில்  ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
சித்திரத்தின் ஒரு மூலையில்
எழுது   உன் பெயரை.

- மொழிபெயர்ப்பு  -  வெ.ஸ்ரீராம்.


இக்கவிதை இடம் பெற்ற நூல் "சொற்கள்",  எழுதியவர் "ழாக் ப்ரேவெர்",
கற்பனை நிலை கவிதைகளும்,  யதார்த்த  மக்கள்  நிலை கவிதைகளும் நிறைந்து  கவர்கிறது  புத்தகம்  முழுவதும்.  மழைச் சாரலின் மென் துளிகளும்,  அன்றாட வாழ்வின் அயர்ச்சியின்  வேர்வையையும்   இயல்பு  நிலையில்  நின்று  உணரவைக்கிறது  ஒவ்வொரு  கவிதையும்.


ழாக் ப்ரேவெர்,  இரண்டாம் உலகப் போர் சூழலில் வாழ்ந்த மகத்தான கவிஞர்,  பல அருமையான படைப்புகளை  உலகிற்கு  பரிசளித்தவர்.  "வாழ்க்கை என்பதற்கு மிகவும் உண்மையான,  மிகவும் பயனுள்ள கலைசொற்களில் ஒன்று கவிதை"  என்ற அழகான உண்மை வரிகளுக்கு சொந்தக்காரர் ழாக் ப்ரேவெர்.


"சொற்கள்"  ஒரு  நல்ல வாசிப்பனுபவம்.

.