Friday, September 24, 2010
மழலை கண் பார்த்தால்...
நேரில் தடம் பதித்துச் சென்றாலும்
நிழல் படத்தில் கையசைத்தாலும்
ரோஜாப்பூ கன்னம் ஒட்டியிருந்தாலும்
கருப்பட்டி நிறம் கலந்திருந்தாலும்
மலர்ந்தபடி சிரித்தாலும்
அழுது தீர்த்து அசந்திருந்தாலும்
கடந்து செல்லும் அக்கணப்பொழுதில்
இறுகிய இதழ்கள் தளர்த்தி
மென் புன்னகை மீட்டெடுத்து
உதடு பதிக்காமல்
பறித்து விடுகின்றனர்
எப்படியேனும்
ஒரு முத்தத்தை.
.
.
.
Friday, September 10, 2010
பிரதிபிம்பம்
ஐந்து நிமிட
அதிகாலை கனவில்
கொட்டியது கொடுக்குகள் நீண்ட
கருந்தேலொன்று.
வலி தெறித்த
பொழுதாகவே கழிந்தது
விடிந்த நாள் முழுவதும்.
பரிதியின் கதிர்கள்
சுட்டெரித்த அவ்வரங்கத்தில்
பேச்சுகள் நயமற்று ஒலித்தது
எள்ளல் பூசி பூரித்திருந்தது.
தலை சேர அனுமதியாமல்
மறுத்தளித்து நகர்ந்து வந்த
நேரம் வானில் அஸ்தமனம்.
நிறை நிலா கண் பார்த்து
ஜன்னல் பூத்தொட்டு
நாள் முடித்தும்
கனவில் குரைத்துகொண்டேயிருந்தது
அன்றைய இரவில்
நாய்கள் இரண்டு.
.
Thursday, September 2, 2010
ஒரு துளி
இலையில் விழுந்து
காம்பில் வடிந்து
பூவில் பட்டு
மீண்டுமொரு
இலைத் தொட்டு
பூமி சேர்ந்தது
கொட்டி தீர்த்த
மழையின் ஒரு துளி
அவ்வளவு அழகாக !
.
Subscribe to:
Posts (Atom)