கூரையை பிய்த்துக் கொண்டிருக்கிறது சிரமத்துடன் சுள்ளிகள் சிதறிக்கிடக்கிறது எதையேனும் கவ்வியபடியே பறந்து செல்கிறது அந்த கிளை நோக்கி. இடையில் சில நாட்கள் காணாமல் போனது. வெண்ணிற இரவொன்றில் விருட்சத்தில் புதிய உயிர்களின் சத்தம் துவங்குகிறது. அப்பறவையின் சிறகடிப்பு இப்பொழுது அதிகரித்து தெரிகிறது. கனியோ இலையோ வாய் குவிந்து கவ்விச் செல்கிறது குஞ்சுகள் நோக்கி. இலைகளின் சட்டென்ற சலசலப்பில் மிரண்டு போகிறது அதன் கண்கள். முற்றத்தில் பறந்து திரியும்போது லேசான சிறு தூரலில் விரைந்தோடிவிடுகிறது விருப்பமுள்ள கூடது கலையாதிருக்க. கூடென்பது அற்புதமென்று சொல்லிப் போகிறது நித்தமும் என் வாசல் கடக்கும் பறவையொன்று.
எப்படியேனும் கண்ணில் பட்டுவிடும் தினம்தோறும் ஏதேனும் பறவையின் இறகொன்று வெண்ணிறத்தில் சில இறகுகள் வெண்மையும், கருமையும் கலந்த நிறத்தில் சில இறகுகள் எந்த பறவை என்ன சொல்ல விழைகிறது என்று புரியாமலே சேகரித்து வைத்திருந்தேன் இறகுகள் அனைத்தையும். வெறுமை தகித்த ஓர் இருண்ட நாளில் இறகுகள் அனைத்திலும் வர்ணம் தீட்டி இயல்பு மாற்றிய வேளையில் அறை முழுவதும் பரவி மின்னுகிறது உதிர்த்து சென்ற பறவைகளின் ஸ்நேகப் புன்னகை.