Friday, April 30, 2010

அடர் காடு





                                                அது  ஒரு அடர்ந்த
                                                காடு போல் தெரிகிறது

                                                வெண்ணிறப்   பூக்களின்
                                                மொட்டவிழ்ப்பு  வசீகரிக்கிறது

                                                நீரோடையும் அதனருகில்
                                                யானை  கூட்டங்களும்  தெரிகிறது

                                                முட்களும்  புதர்களும்  உதிர்ந்த
                                                இலைகளால்  மறைந்திருக்கிறது

                                                கரும்பச்சை  நிற  இலைகள்  கொண்ட
                                                மரங்கள்  மிரட்சியுடன்  நிற்கிறது

                                                இளைப்பாறும்  புலிகள்
                                                இரண்டும்  தெரிகிறது

                                                மரக்கிளை ஒன்றில்
                                                சத்தமின்றி படர்கிறது
                                                பழுப்பு நிற மலைப்பாம்பு

                                                கலையக்கூடும் பறவைக் கூடு
                                                ஏதும்  உள்ளதா என்றஞ்சி
                                                கிளைகளில் கண் தேடும் நேரத்தில்
                                                கலைந்து  நகர்கிறது
                                                இதுவரை
                                                கண்டிருந்த மேகமொன்று.

.

Tuesday, April 20, 2010

நிசப்த இரவு

                                              

                                             நிசப்த இரவொன்றில்
                                             காற்றின் கரங்களை
                                             எதிர்கொள்ள இயலாது
                                             தனிமையின் ரணங்கள்
                                             கண்ணீராய் வழியத் துவங்கியது.
                                             காதலின் வெம்மையில்
                                             உருண்டோடிய
                                             கண்ணீர் துளிகள் சில 
                                             முத்துகளாய் உருப்பெற்றது.
                                             முகமறியா ஒருவனுக்கு
                                             அன்பு மின்ன
                                             முத்தைக் கொண்டு
                                             மாலை தொடுக்க முற்படுகிறேன்.
                                             தனிமை அகலும்  பொழுதொன்றில்
                                             பரிசளிக்க.

.

இடைவெளி


                                             

                                             நிசப்தம் மட்டுமே
                                             படர்ந்திருந்த முன் அறை.
                                             பகிர ஏதுமற்று
                                             விழித்திருந்த மௌனங்கள்.
                                             விலகும்   உறவை
                                             புரியவைத்த உணர்வலைகள்.
                                             ஈரம் உலர்ந்த கணங்கள்
                                             வழிகிறது வீடெங்கும்
                                             இருப்பினும் . . .
                                             முற்றத்தில்  சிதறும்
                                             மழலையின் சிரிப்பில்                                          
                                             மிச்சமிருக்கிறது
                                             இறுக்கம் அவிழும் தருணமொன்று.

.

Sunday, April 18, 2010

குட்டி இளவரசன்


கவிதையை போல் உணரவைக்கும் சிறிய புத்தகம் குட்டி இளவரசன். சிறார் இலக்கியம் என்ற வரிசையில் வந்திருந்தாலும்,  நிச்சயம் பெரியவர்களுக்கான ஒரு அழகான கதை.

மனித வாழ்வில் ஒன்றிவிட்ட விசித்திர குணநலன்களை மிக இயல்பாய் சுட்டிக் காட்டி, ஒரு சிறுவன் உணரும் மிக மென்மையான எண்ணங்களில் வாழ்வின் உண்மைகளை உணர்த்திக் காட்டும் வரிகளால் நிறைந்துள்ளது நாவலின் பக்கங்கள்.



                                           ஆசிரியர் -  அந்த்வான் து செந்த்- எக்சு‌பெரி
                              மொழி பெயர்ப்பு  -   வெ.ஸ்ரீராம்,  மதன்கல்யாணி
                                                            (க்ரியா பதிப்பகம்)



பயணம் மேற்கொண்ட  விமானி ஒருவர்,  விமானம் பழுது பெற்று,  பாலைவனத்தில்  தரையிறங்குகிறார்.  வெம்மை மட்டுமே நிறைந்த சூழலது.
விமானம் பழுதுபார்க்க போராடிக்கொண்டிருக்கும் வேளையில்,  விண்மீனிலிருந்து ஒரு அழகிய சிறுவன் வருவது போல் கற்பனைக்கொண்டு , அவனோடு கழிக்கும் அற்புத பொழுதுகளை இங்கு கதையாய் விரித்துள்ளார்.


குட்டி இளவரசன்,  தன்னிடமிருந்த மலர் ஒன்றின்மேல் கோவம் கொண்டு,
தன் கிரகத்கதை விட்டு வெளியே வேலை தேடும் பொருட்டும்,  அறிவை தேடும் பொருட்டும் மற்ற கிரகங்கள் செல்கிறான்,  அங்கு ஒவ்வொரு கிரகங்களிலும் பலவித மனிதர்களை சந்திக்கிறான்.  மனிதர்களின் இயல்பு  கண்டு மிகுந்த வியப்படைகிறான்.  பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொள்கிறான்.  இறுதியாய் பூமி வந்தடைகிறான்,  விமானியிடம் நேசம் கொள்கிறான், புதிராய் பேசுகிறான்,  நரியுடன் நட்பு பாராட்டுகிறான்,  பின்பு இனம் புரியா உணர்வை சுமக்கும் கனத்த மனதை அளித்துவிட்டு பிரிந்து செல்கிறான்.


 இதனில்,  குட்டி இளவரசனும் விமானியும் பகிர்ந்து கொள்ளும் நேசம், 
அவனின் தனிமை வாழ்வு,  மலரின்மேல் கொண்டிருக்கும் காதல், காதலின்
இனிமை,  புரிதலின்மை,  நரியுடன் கொண்ட நட்பு,  நட்பின் தேவை,  பிரிவு
என அழகான உணர்வுகளை வார்த்தைகளில் செதுக்கி அதன் மூலம் யதார்த்த உண்மைகளை உலகிற்கு  விவரித்துள்ளார் ஆசிரியர்.


"ஒரு புதிரின் ஆளுமை மிதமிஞ்சி இருக்கும்போது பணியாமல் இருக்க முடிவதில்லை...... ",  "ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது சூரிய அஸ்தமனங்கள் மனதுக்கு பிடித்திருக்கிறது......",  " இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது   கண்களுக்கு தென்படாது....... ",  "நீ பழக்கபடுத்திக்கொண்டதற்கு  நீ என்றுமே பொறுப்பாளியாகிறாய்.  உன் ரோஜாவுக்கு நீதான் பொறுப்பாளி ....."
போன்ற வரிகள் மனதில்  இனிய அலைகளை  ஏற்படுத்திவிடுகிறது.


இப்புத்தகம்  படிக்கும்  தருணங்களிலெல்லாம் ஓர் மென்மையான உணர்வு ஆட்கொள்வது மிக இனிய அனுபவம்.  குட்டி இளவரசன் ஓர் அற்புதம்.

.

Sunday, April 4, 2010

காலைப்பொழுது



                                                   அழுது அடம்பிடித்த
                                                   குழந்தை
                                                   என்ன சொல்லியும்
                                                   அடங்கவே இல்லை
                                                   சாலையில் எப்படி
                                                   சமாதானம் செய்வது
                                                   ஓரத்தில் காத்திருந்த
                                                   அரளிப் பூக்களை
                                                   பறித்துக் கொடுத்த
                                                   கணத்தில்
                                                   அழுகை நின்று
                                                   அரும்பியது  மழலைச்சிரிப்பு.
                                                   அழகாகி போனது
                                                   கடந்து சென்ற யாரோ ஒருவரின்
                                                   காலைப் பொழுது.


.