Sunday, April 18, 2010

குட்டி இளவரசன்


கவிதையை போல் உணரவைக்கும் சிறிய புத்தகம் குட்டி இளவரசன். சிறார் இலக்கியம் என்ற வரிசையில் வந்திருந்தாலும்,  நிச்சயம் பெரியவர்களுக்கான ஒரு அழகான கதை.

மனித வாழ்வில் ஒன்றிவிட்ட விசித்திர குணநலன்களை மிக இயல்பாய் சுட்டிக் காட்டி, ஒரு சிறுவன் உணரும் மிக மென்மையான எண்ணங்களில் வாழ்வின் உண்மைகளை உணர்த்திக் காட்டும் வரிகளால் நிறைந்துள்ளது நாவலின் பக்கங்கள்.



                                           ஆசிரியர் -  அந்த்வான் து செந்த்- எக்சு‌பெரி
                              மொழி பெயர்ப்பு  -   வெ.ஸ்ரீராம்,  மதன்கல்யாணி
                                                            (க்ரியா பதிப்பகம்)



பயணம் மேற்கொண்ட  விமானி ஒருவர்,  விமானம் பழுது பெற்று,  பாலைவனத்தில்  தரையிறங்குகிறார்.  வெம்மை மட்டுமே நிறைந்த சூழலது.
விமானம் பழுதுபார்க்க போராடிக்கொண்டிருக்கும் வேளையில்,  விண்மீனிலிருந்து ஒரு அழகிய சிறுவன் வருவது போல் கற்பனைக்கொண்டு , அவனோடு கழிக்கும் அற்புத பொழுதுகளை இங்கு கதையாய் விரித்துள்ளார்.


குட்டி இளவரசன்,  தன்னிடமிருந்த மலர் ஒன்றின்மேல் கோவம் கொண்டு,
தன் கிரகத்கதை விட்டு வெளியே வேலை தேடும் பொருட்டும்,  அறிவை தேடும் பொருட்டும் மற்ற கிரகங்கள் செல்கிறான்,  அங்கு ஒவ்வொரு கிரகங்களிலும் பலவித மனிதர்களை சந்திக்கிறான்.  மனிதர்களின் இயல்பு  கண்டு மிகுந்த வியப்படைகிறான்.  பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று அடிக்கடி தன்னுள் சொல்லிக் கொள்கிறான்.  இறுதியாய் பூமி வந்தடைகிறான்,  விமானியிடம் நேசம் கொள்கிறான், புதிராய் பேசுகிறான்,  நரியுடன் நட்பு பாராட்டுகிறான்,  பின்பு இனம் புரியா உணர்வை சுமக்கும் கனத்த மனதை அளித்துவிட்டு பிரிந்து செல்கிறான்.


 இதனில்,  குட்டி இளவரசனும் விமானியும் பகிர்ந்து கொள்ளும் நேசம், 
அவனின் தனிமை வாழ்வு,  மலரின்மேல் கொண்டிருக்கும் காதல், காதலின்
இனிமை,  புரிதலின்மை,  நரியுடன் கொண்ட நட்பு,  நட்பின் தேவை,  பிரிவு
என அழகான உணர்வுகளை வார்த்தைகளில் செதுக்கி அதன் மூலம் யதார்த்த உண்மைகளை உலகிற்கு  விவரித்துள்ளார் ஆசிரியர்.


"ஒரு புதிரின் ஆளுமை மிதமிஞ்சி இருக்கும்போது பணியாமல் இருக்க முடிவதில்லை...... ",  "ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்போது சூரிய அஸ்தமனங்கள் மனதுக்கு பிடித்திருக்கிறது......",  " இதயத்திற்குத்தான் பார்வை உண்டு, முக்கியமானது   கண்களுக்கு தென்படாது....... ",  "நீ பழக்கபடுத்திக்கொண்டதற்கு  நீ என்றுமே பொறுப்பாளியாகிறாய்.  உன் ரோஜாவுக்கு நீதான் பொறுப்பாளி ....."
போன்ற வரிகள் மனதில்  இனிய அலைகளை  ஏற்படுத்திவிடுகிறது.


இப்புத்தகம்  படிக்கும்  தருணங்களிலெல்லாம் ஓர் மென்மையான உணர்வு ஆட்கொள்வது மிக இனிய அனுபவம்.  குட்டி இளவரசன் ஓர் அற்புதம்.

.

1 comments:

நிலாரசிகன் said...

நல்ல நூல் அறிமுகம் மேடம்.

Post a Comment